சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள்
(சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் ஆதீனப்புலவர், இலண்டன் மெய்கண்டார் ஆதீனம்.)


சைவம், தமிழ் ஆகிய இரு துறைகளிலும் ஈழத்தமிழர் அரும்பெரும் பணிகள் ஆற்றியுள்ளனர். சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பங்களிப்பு கணிசமானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் பணிகள் சைவத்தையும் அதன் தத்துவத்தையும் அழியாமல் காத்து வளர்த்தன.

இப்பெருமக்கள் அனைவரினது பணிகளையும் இச்சிறு கட்டுரையில் விளக்குதல் இயலாததொன்று. தவத்திரு ஆறுமுகநாவலருக்கு முன்பிருந்த ஞானப்பிகாசர் தொடங்கி அண்மையில் அமரரான பண்டிதர் மு. கந்தையா வரையிலான அறிஞர் சிலரின் பணிகள் விளக்கப்படுகின்றன. இதிலும் சிலரின் பணிகள் மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. பண்டிதரின் பணிகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

ஞானப்பிரகாசர்

மெய்கண்ட சாத்திர நூல்களிலே மெய்கண்டார் (கி.பி. 1232) எழுதிய சிவஞானபோதத்தை முதன்மை நூலாகக் கொள்வது மரபு. இதற்குப் பின் வந்த சிவஞானசித்தியார் அதன் விருத்தியுரையாகவும் சிறந்த ஆய்வு நூலாகவும் விளங்குகிறது. சுபக்கம், பரபக்கம் என இரு பகுதிகளாக அமைந்த இந்நூலின் முதற்பகுதிக்கு ஆறு அறிஞர்கள் எழுதிய உரை சிறந்ததாகக் கொள்ளப்பட்டு, அறுவர் உரை எனப் போற்றப்படுகிறது. அவர்களுள் ஒருவரான ஞானப்பிரகாசர் (17-ம் நூற்றாண்டு) யாழ்பாணத்து திருநெல்வேலியில் பிறந்தவர்.

போர்த்துக்கேயர் ஆட்சியில், அவர்களின் கொடூரமான சைவநிந்தனையைச் சகிக்க முடியாதவராக இவர் தமிழ்நாடு சென்று, அங்கிருந்து வடக்கே போய் வடமொழியும் சாத்திரமும் பயின்றார். பின்னர் தமிழ்நாடு திரும்பி, திருவண்ணாமலை ஆதீனத்தில் சேர்ந்தார்.

தமிழிலே சிவஞானசித்தியார் உரையும் வடமொழியிலே ஒன்பது நூல்களும் எழுதியவர் ஞானப்பிரகாசர். அவரின் சித்தியார் உரை அவர் காலத்திலும் பின்னரும் பெரும் புயலைக் கிளப்பியது. சிவஞான சித்தியாரிலே சிவசமவாதக் கொள்கையைக் காண முனைந்துள்ளார் என்று பின்னால் வந்த சிவஞானசுவாமிகளால் (18-ம் நூற்றாண்டு) ஞானப்பிரகாசர் வன்மையாகக் கண்டிக்கப்பட்டார்.

ஞானப்பிரகாசரின் ஆய்வு நோக்கு அவர் காலத்து அறிஞரின் நோக்கிலிருந்து விலகியிருந்ததென்பது பலரின் கருத்து. ஆயினும் அவரின் சிந்தனைத் திறனும் தர்க்கத் திறமையும் பலராலும் போற்றப்படுவது. இது குறித்து சித்தாந்த அறிஞர் டாக்டர் தேவசேனாபதி பின்வருமாறு கூறுகிறார்:
He holds the view that souls at release are equal to Siva in every respect, a view which is interestingly and ably argued but totally in variance with Siddhanta. .................... Though Jnanaprakasar attempts to read sivasamavada in Siddhiyar, he deserves credit for following an Unusual line of thought’. – (Dr. V. A. Devasenapathy, Saiva Siddhanta, University of Madras, 1974).

'முத்தியிலே எல்லாவகையிலும் சிவத்துக்கு ஒத்த நிலையில் உயிர்கள் இருக்கும் என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார். இந்தக் கருத்து சிந்தனையைத் தூண்டுவது வாதத் திறமையுடையது. ஆனால் சித்தாந்தத்திற்கு முற்றிலும் வேறுபட்டது. .............. சிவசமவாதத்தை சித்தியாரிலே காண விழைந்தாலும் ஞானப்பிகாசர் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த சிந்தனையைக் கடைப்பிடிப்பது பாராட்டத்தக்கது.


ஞானப்பிரகாசரின் கருத்து சிவசமவாதம் காண்பதுபோல் இருந்தாலும், உண்மையில் அதில் சிவசமவாதம் இல்லை என்பது சித்தாந்திகள் சிலரின் கருத்து. யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த அறிஞர் ஏழாலை பண்டிதர் மு. கந்தையாவும் இதே கருத்தைக் கொண்டுள்ளார்.

ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையை அவரின் எலும்பைக் கொண்டு உயிர்ப்பித்தார் என்பது சிவசமவாதம் அல்ல. சம்பந்தர் செயல் போல் அது இருப்பினும், உண்மையில் அது அவர் மூலம் நிகழ்ந்த சிவன் செயலே, என்று உதாரணம் கூறி ஞானப்பிரகாசர் உரைக்கு அரண் செய்வாரும் உளர்.

எவ்வாறாயினும் சைவசித்தாந்த ஆய்வு மேற்கொள்வோருக்குப் பயன்படும் அறுவர் உரையில் ஒன்று ஞானப்பிரகாசர் உரை. அண்மைக்காலத்தில் இது தமிழகத்துப் பதிப்புக்களில் இடம்பெறாததைக் காணமுடிகிறது. இது வேதனைக்குரியது, தர்க்கத்தின் அடிப்படையிலும் அறிவு பூர்வமாகவும் ஆய்வு நடத்திய ஞானப்பிரகாசரை ஈழத்தில் சித்தாந்த ஆய்வின் முன்னோடி எனலாம்.

ஆறுமுக நாவலர்சித்தாந்த ஆய்வுக்கு முன்னோடியாக ஞானப்பிரகாசரைக் கொண்டால் ஈழத்தில் சித்தாந்த வளர்ச்சிக்கும், பின் வந்த ஆய்வாளரின் முயற்சிக்கும் உந்து சக்தியாக விளங்கியவர் ஆறுமுகநாவலர் (1822-1879) எனலாம். சைவத்தையும் தமிழையும் அழிவிலிருந்து காப்பாற்ற அவர் மேற்கொண்ட பரந்துபட்ட பணிகளில் சைவசித்தாந்த வளர்ச்சி தொடர்பானவை சிறிதே. ஆயினும் அவரின் வழியிலே ஒரு ஞானபரம்பரை உருவாகி இன்றுவரை சைவத்துக்கும் தமிழுக்கும் ஆக்கம் அளித்து வருகின்றது. நாவலரில் தொடங்கி சபாபதி நாவலர், சங்கர பண்டிதர் சி. வை. தாமோதரம்பிள்ளை, செந்திநாதையர், பொன்னம்பலப்பிள்ளை, குமாரசாமிப்புலவர், சபாரத்தின முதலியார், குமாரசாமிக் குருக்கள், சிவபாதசுந்தரம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பண்டிதர் கந்தையா என்று இப்பரம்பரை நீண்டு செல்வதைக் காணலாம். இவர்களின் பணிகள் சைவசித்தாந்த வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன.

ஒரு பெரிய நிறுவனமே செய்ய முடியாத பணிகளைத் தனிமனிதராக நின்று செய்த ஆறுமுகநாவலரின் நோக்கு சைவசித்தாந்தத்தை மட்டும் வளர்ப்பதோ ஆயவதோ அல்ல. ஆயினும் அவரின் எழுத்துக்கள் சித்தாந்த ஆய்வுகளையும் வளர்ச்சியையும் காணமுடிகிறது.

நாவலர் தன் பெரியபுராணப் பதிப்பில் எழுதிய உபோற்காதமும் சூசனங்கள் என்ற வகையில் அமைந்த பல கட்டுரைகளும் பெரியபுராணத்தின் உள்ளுறையாயுள்ள அதன் சித்தாந்த தத்துவங்களை வெளிப்படுத்துகின்றன. இவற்றை அவர் சைவாகம நூல்களின் சான்றுகளோடும், சைவத் திருமுறைகளுக்கும் சித்தாந்த நூல்களுக்கும் முரணாகாத வகையிலும் ஆய்ந்து எழுதுகிறார்.

சுாந்தோக்கியோபநிடதம் , கைவல்யநவநீதம், முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, அவை குறித்த தகரவித்தையையும், அதனை உபாசிக்கும் முறையையும் விளக்கி. சைவர்களுக்கு மிக முக்கயமான கோயிலாக விளங்கும் சிதம்பரத்தையும், அதன் தத்துவத்தையும் விளக்குகிறார். இங்ஙனம் விளக்கி, சிதம்பரம் பூதாகாசம் போல் சடமாகாது, அது சித் என்று நிறுவுகிறார்.

வடமொழி தமிழ்மொழியிலுள்ள பல நூல்களை ஆதாரமாகக் கொண்டு, சிவன் அனந்த நடனமிடும் இடம் உடம்பிலே இடகலைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனை என்று கூறுவதும், அதனைச் சிதம்பரத்துடன் ஒப்புநோக்குவதும் அவரின் தர்க்கத் திறமைக்கும் நூலறிவுக்கும் ஆய்வுத் திறமைக்கும் சான்று பகர்வன.

அவர் வேதத்தைப் போற்றினும், அவரின் ஆய்வு முடிவுகளில் வேதத்துக்கு மேலான இடத்தைக் கொடுக்கவில்லை. சைவசித்தாந்த சிந்தனைகளே மேலான இடத்தைப் பெறுகின்றன. முற்கூறிய அவரின் உபோற்காதத்தில் பின்வருமாறு எழுதுகிறார்.

'இதுகாறும் கூறியவற்றால், சைவசித்தாந்தத்தன்றி பரமுத்தி சித்தியாதென்பதும் ....... வேதத்துள் விதித்த வேள்வி முதலியனவெல்லாம் அநித்தியமாகிய காமியங்களைப் பயப்பன என்பதும் பெறப்பட்டன. வேள்வி முதலியன ஞானத்தைப் பயவாமை மாத்திரமேயன்றி, தீவினைபோல் அது நிகழவொட்டாது தடைசெய்து நிற்றலும் உடையனவேயாம்.'

சைவத்தையும் சித்தாந்த தத்துவத்தையும் எளிதாக எல்லோரும் விளங்கிக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு தரத்தினருக்கும் ஏற்ற விதத்தில் படிக்கிரமமாக எழுதப்பட்டவை அவரின் நூல்கள். இதற்கு அவரின் சைவ வினா விடை நூல்கள் நல்ல உதாரணங்கள்.

நாவலர் சித்தாந்தக் கொள்கைகளை ஆய்ந்து நிறுவும்முறை எவரும் மறுக்க முடியாத வகையில் அமைந்தது. ஆய்வு முடிவுகளில் திருமுறைகளுக்கு முரணாகாமால் உண்மைகள் நிறுவப்பட்டு இருக்கும்.

செந்திநாதையர்ஆறுமுகநாவலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, அவரின் பணிகளைத் தொடர்ந்தவர் யாழ்ப்பாணத்துக் குப்பிளான் கிராமத்தில் பிறந்த செந்திநாதையர் (1858 – 1922). காசியில் பத்தாண்டுகள் தங்கி வடமொழி நூல்களை ஆய்ந்தவர் இவர். இதனால் இவர் 'காசிவாசி செந்திநாதையர்என அழைக்கப்படுகிறார். காசி வாழ்க்கைக்குப்பின் தமிழகத்தில் வாழ்ந்த செந்திநாதையர், திருப்பரங்குன்றத்தில் 'வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த வித்தியாசாலை' என்ற பாடசாலையை நிறுவிப் பணி புரிந்தார்.

நாவலர், செந்திநாதையர் ஆகியோர் பணிகளை ஈழத்திலும் பார்க்கக் கூடுதலாக தமிழகம் போற்றிப் பாராட்டியது. தமிழகத்துத் திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' என்ற பட்டமளித்து ஆறுமுகத்iதை 'ஆறுமுகநாவலர்' ஆக்கிக் கௌரவித்தது. செந்திநாதையருக்கு 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து அவரின் சைவப்பணிகள ஊக்குவித்தது. திரு. வி. க.வின் இளமைக்காலக் குருவாகிய யாழ்ப்பாணத்து சதாவதானி கதிரைவேற்பிள்ளைக்கு 'மாயாவாததும்சகோளரி' என்ற பட்டத்தை செந்திநாதையர் கையாற் கொடுத்துப் போற்றியது. இப்படிப் பல ஈழத்தறிஞரை போற்றி அவர்களால் பயனடைந்தது தமிழகம். தமிழகத்தினால் ஈழத்தமிழர் ஆக்கம் பெற்றனர்.

செந்திநாதையர் எழதிய நூல்கள் பல. பழைய கட்டுரைகளிலிருந்து அவை நாற்பத்தியைந்தெனத் தெரியவருகின்றன. அவர் பிறந்த யாழ்ப்பாணத்துக் குப்பிழான் கிராமத்தில் உருவான செந்திநாதையர் ஞாபகார்த்த சபை 1978-ல் வெளியிட்ட 'காசிவாசி செந்திநாதையர்' என்ற மலரில் அவரின் இருபத்தொரு வெளியீடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 'சித்தாந்தப் படம்' என்ற ஒன்று வெளியிட்டு அன்று ஒரு புதுமுறை விளக்கம் அளித்தவர் இந்த அறிஞர்.

வேதாகம நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை கொண்ட செந்திநாதையரின் ஆய்வு முடிபுகள் எவராலும் மறுக்க முடியாமல் அமைந்தவை. அத்வைத வேதாந்தமும் விசிட்டாத்வைதமும் ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணினார். இதன் விளைவாக மூல நூல்களை ஆராய்ந்து, அதன் விளக்கமாக அமைந்த சில கருத்துக்கள் மூல நூலிலுள்ளவற்றை மாற்றியும் திரித்தும் வெளிவந்தவை எனக் கண்டார். இவற்றை விளக்குவதாக இவர் எழுதிய நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது.

நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆராய்ச்சி முகவுரையாக இரு நீண்ட உபக்கிரக மணிகைகள் எழுதியுள்ளார். ஒன்று உபநிடத உபக்கிரக மணிகை. மற்றையது பிரம சூத்திர உபக்கிரக மணிகை. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு டாக்டர் பட்டம் வழங்கலாம் என பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவரகள் கூறியுள்ளார்கள். தர்க்க முறையிலும் கதைகள் மூலமும் பிரம சூத்திரத்தில் காணும் கருத்து வேறுபாடுகளையும், மயக்கங்களையும் செந்திநாதையர் விளக்குவது அன்றிருந்த வழியிலிருந்து வேறுபட்டிருந்தது.

பின்வந்த உபநிடதங்களே வேதாந்தம் என்று பலர் கூறுவர். இது காரணப் பெயராக வந்தது. வேதம் காட்டும் ஆத்மானந்த அனுபவமே வேதாந்தம் என்பதன் பொருள், அது காரண இடுகுறிப் பெயராக வந்தது, என்பது செந்திநாதையரின் கருத்து. அவரின் 'சைவ வேதாந்தம்' என்னும் நூல் இதனை விளக்குகிறது. வேதங்களிலுள்ள கருத்துக்களையும் தேவாரத்திலுள்ள கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து, அவற்றுக்கிடையில் உடன்பாடு கண்டு எழுதப்பட்ட நூல் 'தேவாரம் வேதசாரம்'.

யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை 'கந்தபுராணக் கலாச்சாரம்' என்று ஈழத்துப் பேரறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை குறிப்பிடுவதுண்டு. கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் போன்ற நூல்களை, மக்கள் தேவை கருதி, எளிமையான வசனநடையில் எழுதியவர் ஆறுமுகநாவலர். அவற்றின் உள்ளார்ந்த சித்தாந்தக் கருத்துக்களையும் கொள்கைகளையும் விளக்கும் நோக்குடன் எழுதியவர் செந்திநாதையர். இந்த வகையில் எழுதப்பட்ட ஒரு நூல் 'கந்தபுராண நவநீதம்'. சைவ அறிஞருலகைப் பெரிதும் கவர்ந்த நூல் இது.

சிவஞானபோதத்துக்கு உரையாக அமைந்தவை சிவஞானமுனிவரின் சிற்றுரையும் பேருரையாகிய பாடியமும். இவை எல்லோராலும் எளிதில் விளங்க இயலாதவை. சிவஞானபோதத்தை எளிதில் விளக்கும் நோக்கில் செந்திநாதையர் எழுதிய உரைநூல் 'சிவஞானபோத வசனாலங்கார தீபம்'. ஆயினும் இன்றுள்ளவருக்கு இதனை விளங்குவதும் எளிதாக இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. 1917-ல் வெளிவந்த இந்நூலின் முன்னுரையில், 'யாம் பெரும்பான்மையும் மாதவச் சிவஞான யோகிகள் உரைத்தருளிய உரையைத் தொடர்ந்தே இதனை எழுதினோம்' என்று செந்திநாதையர் குறிப்பிடுகிறார்:
ஆறுமுகநாவலர் கொள்கை அடிப்படையில் வேதக்கருத்துக்களிலும் பார்க்க தமிழ்த் திருமுறைகளுக்கும் சாத்திர நூல்களிலுள்ள கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கு ஆகம நூல்களைத் துணையாகக் கொள்கிறார். செந்திநாதையர் அவற்றுக்கிடையில் உடன்பாடு கண்டு சித்தாந்த சைவத்தை வளர்க்கும் பணியில் ஈடுபடுவதைக் காணலாம்.

சிவபாதசுந்தரம்சைவப் பெரியார் சிவபாதசுந்தரம் (1878 - 1957) ஆசிரியராகப் பணி புரிந்தவர். பள்ளிக்கூடப் பாடநூற் திட்டத்துக்காக சமய நூல்கள் எழுதத் தொடங்கியவர். இதனால் அவரின் நூல்களில் எளிமையும் விளக்கமும் இருப்பது இயல்பு. இத்தகைய ஒரு நூல் அவரின் விளக்கவுரையுடன் வெளிவந்த திருவருட்பயன். இது இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்காகப் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிலுள்ள விசேடவுரை சிவஞானபோதம், சிவஞானசித்தியார் ஆகியவற்றின் கருத்துக்களையும் அவற்றின் பேருரைகளையும் துணையாகக் கொண்டு எழுதப்பட்டது. மாணவருக்கன்றி அறிஞருக்கும் பயன்படும் சிறந்த சித்தாந்த நூல் இது.

தர்க்க முறையிலும் தெளிவாகவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல் ‘The Saiva School of Hinduism’. இதனை இங்கிலாந்திலுள்ள ‘George Allen and Unwin Ltd’ என்னும் புகழ்பெற்ற பிரசுர நிறுவனம் 1934-ல் பதிப்பித்தது. சைவசமய, சைவசித்தாந்த அறிவை அனைவருக்கும், குறிப்பாக ஆங்கில அறிவு மிக்கவருக்கு, எளிமையாகப் புகட்டுவது இந்நூல்.

நாவலரின் சைவ வினாவிடை மாணவரின் தரத்துக்கேற்ப முதலாம் புத்தகம், இரண்டாம் புத்தகம் என்று இரு நூல்களாக எழுதப்பட்டுள்ளன. சிவபாதசுந்தரம் எழுதிய சைவபோதம் நூலும் முதலாம் புத்தகம், இரண்டாம் புத்தகம் என இரண்டாக உள்ளன. ஆரம்ப நிலையிலுள்ள மாணவருக்கும் அறிவு மிகுந்த மாணவருக்குமாக இவை அமைந்துள்ளன.

நாவலரும் அவர் வழியில் பணி செய்தவர்களும் போல் சிவபாதசுந்தரமும் அன்னிய மதத்தினரின் சைவத்துக்கு முரணானன கருத்துக்களையும் பிரசாரங்களையும் மறுப்பதற்காக எழுதியவை பல. வயலெற் பரஞ்சோதி என்ற கிறித்தவப் பெண்மணி முனைவர் பட்டத்துக்காகச் செய்த ஆய்வு நூல் சைவ சித்தாந்தம் பற்றியது. அதில் பல தவறான, சித்தாந்தத்துக்கு முரணான, கருத்துக்கள் இருந்தன.

இந்த ஆய்வு நூலுக்கு ஒரு மறுப்பெழுதி உண்மையை விளக்குவதற்குத் தகுந்த அறிஞர் சிவபாதசுந்தரமே என்று தமிழகத்திலுள்ள தருமபுர ஆதீனம் கருதியது. அவ்வாதீனத்தின் வேண்டுகோளின்படி அவர் எழுதிய நூல் ‘An Outlinline of Sivagnanabodham with a Rejoinder to a Christian Critic’. இந்நூல், ஆய்வு நூலின் பொருத்தமற்ற கருத்துக்களை மறுப்பதோடு, சிவஞானபோத நூற்பாக்களுக்கு சிறந்த விளக்கம் அளிப்பதாகவும் உள்ளது. இதுவும் அவரின் பிற நூல்களும் கட்டுரைகளும் பல நூல்களை ஆய்ந்து சிந்தனைத் தெளிவுடன் எழுதப்பட்டவை.
புராணங்கள் சமய உண்மையை உணர்த்த வந்த கதைகள் என்பதை வலியுறுத்துபவர் சிவபாதசுந்தரம் அவர்கள். அவரின் 'கந்தபுராண உண்மை' என்ற நூல் புராண பாத்திரங்களும், தொடர்புடைய கதைகளும் உணர்த்தும் சித்தாந்தம் சார்ந்த உள்ளார்ந்த கருத்துக்களை வெளிக்கொணர்ந்து விளக்குகிறது. அத்தகைய ஒரு நூலை ஈழத்து நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் எழுதியுள்ளார். அதன் பெயர், 'கந்தபுராணக் கதைகளும் அவை உணர்த்தும் உண்மைநூற் கருத்தும்' என்பதாகும்.

பண்டிதர் மு. கந்தையாசெந்திநாதையர் பிறந்த குப்பிளானுக்கு அயற்கிராமமான ஏழாலையில் பிறந்தவர் பண்டிதர் மு. கந்தையா அவர்கள் (1917 - 2002). இதனால் அவர் ஏழாலை பண்டிதர் கந்தையா என்று பொதுவாக அழைக்கப்படுவதுண்டு. சித்தாந்தத் தெளிவும் மும்மொழிப் புலமையும் கொண்ட தமிழ்ப் பண்டிதரான கந்தையாவுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதி என்னும் பட்டம் அளித்துக் கௌரவித்தது.

சைவத்தையும் அதன் தத்தவத்தையும் பேணி வளர்ப்பதில் தன் வாழ்நாளைக் கழித்த பெருமகன் பண்டிதர். முப்பதுக்கு மேற்பட்ட அரிய நூல்களும் பல ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவை அனைத்தும் சைவத்துக்கும் சித்தாந்த வளர்ச்சிக்கும் அரண்செய்வன.

சைவ சமயக் கருத்துக்களைக் கூறும் பலர், அவை வேதங்களில் உள்ளன, ஆகமங்களில் உள்ளன என்று கூறுவதுண்டு. எந்த வேத நூலையும் ஆகம நூலையும் குறிப்பிட்டுச் சொல்வதரிது. பண்டிதர் தான் மேற்கோள் காட்டும் வேதாகமக் கருத்துக்களை குறிப்பிட்ட நூல்களின் பெயர்களைக் கூறி விளக்குவதைக் காணலாம். சைவசித்தாந்த நூற்கருத்துக்களை, வேதாகம நூற்கருத்துக்களை ஆதாரமாகக் காட்டி விளக்குவது இவரின் தனித்திறமை. இத்திறமையை இன்றைய அறிஞர் பலரிடம் காண்பதரிது.

வேதாகமங்களை ஆதாரமாகக் காட்டினாலும், சைவசித்தாந்த நூல்கள் தமிழ்மொழியிலே இருப்பதால், அதன் விளக்கத்துக்கு தமிழ்மொழி விளக்கம் இன்றியமையாதது என்பது அவர் கருத்து. 'சித்தாந்தச் செழும் புதையல்கள்' என்ற அவரின் நூலிலுள்ள பின்வரும் வரிகள் ஒரு உதாரணம்.

'சைவசித்தாந்த சாஸ்திரங்கள் தமிழ் மொழியிலேயே வாய்த்துள்ளன. இவையனத்தையும் ஒரு கூட்டாக எண்ணுவார்க்கு, தமிழ்க் கலாசாரப் பின்னணியிலே சைவ சித்தாந்தக் கலை சோபிப்பது புலனாகும். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், திருமுறைகள் முதலிய அனைத்து நூல்களிலும் சைவசித்தாந்தக் கருத்துக்கள் செறிந்து கிடக்கும் நிலையும் சுவாரஸ்யமானதொன்று. ஆதலால் சைவசித்தாந்த விளக்கம் தமிழ்மொழி விளக்கத்தை இன்றியமையாதென்பது சொல்லாமலேயமையும். இதனால் உயர் தமிழ் இலக்கிய இலக்கண மரபு வழிப்பாடான தமிழ் அறிவுநிலை சைவசித்தாந்த விளக்கத்துக்கு ஒரு அடிப்படைத் தேவை என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.'

இவ்வாறு எழுதும் இம்மேதையின் உயர் தமிழ்ப் புலமை சித்தாந்த விளக்கங்களில் காணும் மயக்கங்களையும் முரண்பாடுகளையும் களைந்தன. உண்மைவிளக்கம் எனும் சித்தாந்த நூலின் ஒரு பாடல் முத்தியில் பேரின்பத்தை அனுபவிப்பது ஆன்மா, அந்த இன்பத்தைக் கொடுப்பவன் இறைவன் என்று கூறுகிறது. இது எல்லோருக்கும் ஒத்த கருத்தே. ஆனால், இக்கருத்தைத் தொடர்ந்து 'இத்தை விளைவித்தல் மலம்' (இதனை விளைவிப்பது ஆணவமலம்) என்று கூறுகிறது. இது விளங்க முடியாததாக, மயக்கம் தருவதாக உள்ளது. ஆணவத்திலிருந்து விடுபட்ட நிலையே முத்தி நிலை. இந்த நிலையில் ஆணவம் எப்படி ஆன்மாவுக்கு இன்பத்தை விளைவிக்கும்? விளங்க முடியாத இத்தொடருக்கு அறிஞர்கள் வெவ்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர். 'முத்தியில் ஆணவம் திருந்திய நிலையிலுள்ளது', 'முத்தியிலும் ஆணவம் உண்டு. ஆனால் செயற்படுவதில்லை' போன்ற விளக்கங்கள் தரப்பட்டன. இவை சரியான விளக்கங்களாக அமையவில்லை என்பதைப் பண்டிதர் உணர்ந்தார்.

ஆகமக் கருத்துக்களைக் கொண்டவை சித்தாந்த நூல்கள் என்றாலும், அவை தமிழ்ச்செய்யுள் நூல்களே. தமிழிலுள்ள சாத்திர நூல்களுக்குப் பொருள் காண்கையில் செய்யுள் உத்தி முறைகளைத் தழுவியே பொருள் காணவேண்டும். இது நூலாசிரியர்களின் உள்ளக்கிடக்கை என்பது பண்டிதரின் கருத்து. சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கண நுட்பங்களிலும் தர்க்க விதிகளிலும் பயிற்சியின்றி சித்தாந்தச் செய்யுட்களை விளங்குதல் இயலாதென்பதும் அவரின் கருத்து. எனவே 'இத்தை விளைவித்தல் மலம்' என்ற தொடருக்கு விளக்கம் காண தமிழ்க் கவிதை உத்திகளை உதாரணத்துக்கு எடுக்கிறார்.

'கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை', என்பது திருக்குறள். 'கெடுப்பதூஉம்' என்ற சொல்லுக்கு பரிமேலழகர் 'பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதும்' என்று உரை காண்கிறார். இதனை எடுத்துக் கொண்டு பண்டிதர் குறிப்பிட்ட பாடலை விளக்குகிறார். 'பெய்யாமை' என்ற எதிர்மறை கெடுதலுக்குக் காரணமாயிருப்பதால் 'மழை' காரணமென்று கூறப்படுகிறது. இதுபோல் மறையாமை என்ற எதிர்மறை இன்ப விளைவுக்குக் காரணமாயிருப்பதால் 'மலம்' காரணமென்று கூறப்படுகிறது. ஆகவே 'இத்தை விளைவித்தல் மலம்' என்ற தொடரில் 'மலம்' என்பது 'ஆணவமலம் உயிரை மறையாமை'என்றே பொருள் கொள்ள வேண்டும். இது போன்ற பண்டிதரின் விளக்கங்கள் சித்தாந்த வளரச்சிக்கு ஆக்கமளித்தன.

இந்து சமயம் என்பது இந்திய சமயங்கள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர். அது ஒரு தனிச்சமயம் அல்ல. விவேகானந்தர் போன்ற ஞானிகளும் இதனைக் கூறியுள்ளனர். இந்து சமயம் என்ற பெயரால் உடன்பாடற்ற தத்துவ விளக்கங்களும் வழிபாடுகளும் சைவத்துள் புகுந்துள்ளன. சங்கரரின் அத்வைத வேதாந்தம் இவற்றில் ஒன்று. நாவலர் பிறந்த யாழ்ப்பாணத்தில், ஸ்மார்தராகத் தம்மைக்காட்ட முயலும் சைவக் குருமாரினால், செல்வாக்கு மிக்க சிலரின் உதவியுடன் கட்டப்பட்ட ஆஞ்சனேயர் கோயில் இன்னொன்று. இவை போன்ற சைவத்தைச் சிதைக்கும் ஊடுருவல்களைக் கண்டித்துப் பண்டிதர் எழுதிய கட்டுரைகள் பல. இவற்றில் முக்கியமானதொன்று 'சைவமண்ணில் சைவம் சிதைக்கப்படுகிறது! உள்ளிருந்தே கொல்லும் பகை'. இன்னொன்று, 'ஆஞ்சநேயர் சைவர் வழிபாட்டுத் தெய்வமல்ல'.

பதி, பசு, பாசம் மூன்றும் என்றுமுள்ள அனாதிப் பொருட்கள் என்பது சைவசித்தாந்தக் கொள்கை. 'பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போல் பசுபாசம் அனாதி' என்ற திருமந்திரப் பாடல் இதனை விளக்குகிறது. இதில் வரும் கடைசியடி பதியணுகிற் பசுபாசம் நிலாவே' என்று வருகிறது. இதன் பொருள் 'பதியாகிய இறைக்கு முன்னால் பசுவைப் பற்றிய பாசம் நில்லாது நீங்கும்' என்பது இது சித்தாந்த உண்மை. ஹவாய் ஆதீனத்தின் சித்தாந்தம் தொடர்பான வெளியீட்டில், இறைவனை அணுகினால் பசுவாகிய ஆன்மாவும் பாசப்பொருட்களும் இருக்கமாட்டா என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. கடவுள் ஒன்றே மெய்ப்பொருள், உயிர் உட்பட்ட மற்றவை அதன் பரிணாமங்கள் அல்லது தோற்றங்கள் என்ற வேதாந்தக் கருத்துக்கு இவ்வெளியீடு துணை செய்கிறது. இவ்வாதீனத்தின் ‘Monism and Pluralism in Saiva Siddhanta’ என்ற நூலிலும் தவறான கருத்துக்கள் சித்தாந்தக் கொள்கையாகக் காட்டப்பட்டுள்ளன. பொருத்தமற்ற இக்கருத்துக்களை மறுப்பதாக அமைந்தது பண்டிதரின் 'சைவசித்தாந்தத்தில் மாயை உண்மை' என்ற நூல்.

ஆறுமுக நாவலர் அவர்கள் தனது பெரியபுராணப் பதிப்பில், ஒவ்வொரு நாயனார் சரிதையின் முடிவிலும், சூசனம் என்ற பெயரில் ஒவ்வொரு கட்டுரை எழுதி வெளியிட்டார். சைவசிந்தாந்தக் கருத்துக்களுடன் சைவம் குறித்த அரிய விளக்கங்கள் கொண்டவை இச்சூசனங்கள். இருபத்து மூன்று நாயன்மார்களுக்கு மட்டுமே அவை எழுதப்பட்டன. பரந்துபட்ட அவரின் பணிகளுக்கிடையில் அவற்றை நிறைவு செய்ய அவருக்கு நேரம் கிடையாமல் இருந்திருக்கலாம். மற்றைய நாற்பது நாயன்மாருக்கும் சூசனம் எழதி, நாவலரின் பணியை நிறைவு செய்யும் தகுதி பண்டிதருக்கே உண்டென மலேசியா சைவசித்தாந்த நிலையம் உணர்ந்தது. அதன் வேண்டுகோளுக்கிசைந்து பண்டிதர் எழுதி நிறைவு செய்தார்.

திருமுறைகளுக்கு சித்தாந்த விளக்கமளித்த பண்டிதர், சைவக்கிரியைகளுக்கும் அவ்வாறே செய்தார். அவரின் 'சித்தாந்த விளக்கிற் சைவக்கிரியைகள்' என்ற நூல் இத்தகையது. 'சித்தியார்த் திறவுகோல்', 'சித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி' போன்ற அவரின் பிற நூல்களும் சைவசித்தாந்த அறிவுக்கும் ஆய்வுக்கும் துணைசெய்வன. அவரின் இன்னொரு சிறந்த நூல் 'சித்தாந்தச் செழும்புதையல்கள்'. அவரின் வேண்டுகோளின்படி இந்நூல் ஆங்கிலத்தில் என்னால் மொழி பெயர்க்கப்பட்டு ‘Treaure Trove of Siddhanta’ என்ற பெயரில் வெளிவந்தது.

சித்தாந்த மாணவரையும் அறிஞரையும் ஆய்வாளரையும் ஊக்குவிப்பதும், தேவையெனில் திருத்துவதும் பண்டிதரின் பண்பு. அவருடன் நான் (இக்கட்டுரை ஆசிரியர்) நேரில் கண்டு கலந்துரையாடினது மிகமிகக் குறைவு. ஆனால் கடிதத் தொடர்பு நீண்டகாலம் இருந்தது. சென்னை சைவசித்தாந்த மன்றத்தின் 'சித்தாந்தம்' இதழில் வந்த எனது முதற் கட்டுரை 'அகரம் போல் நிற்கும் இறை' என்பது. அப்பொழுது நான் சென்னையிலே வாழ்ந்தேன். அக்கட்டுரையை வாசித்த பண்டிதர் அவர்கள் அதனைப் பாராட்டி, அது செந்திநாதையர் பிறந்த ஊரின் (எனது ஊரின்) வாசனையால் வந்ததென்றும் தொடர்ந்தும் நான் எழுத வேண்டுமென்றும் வேண்டிக் கடிதம் எழுதியிருந்தார். இது அவர் எனக்கெழுதிய முதற் கடிதம்.

மேலை நாட்டுத் தத்துவங்களில் காணப்படுபவை சில சித்தாந்தம் உள்ளிட்ட இந்திய தத்துவங்களில் நேராகப் பேசப்படுவதில்லை. இவற்றில் ஒன்று Freewill என்பது. தமிழ் நூல்களில் இதற்கு நேரான சொல்லைக் காண்பதரிது. உலக சைவப் பேரவையின் 'சைவ உலகம்' இதழில் நான் ஆங்கிலத்தில் எழுதிவந்த தொடர் கட்டுரைகளில் ஒன்று Freewill . இதனைப் படித்த பண்டிதர், Freewill ஆய்வு முக்கியமான ஒரு விடயம். அதை நல்ல முறையில் கையாண்டிருக்கிறீர்கள்', என்று எழுதினார். இச்சொல்லுக்கு 'தற்றுணிபு' என்பது தமிழ்ப்பெயர் என்று கூறி, அதனைச் சைவசித்தாந்த உண்மைகளுடன் தொடர்பு படுத்தி விளக்கியிருந்தார். அவரின் இந்த விளக்கம் 'சைவ உலகம்' இதழில் பின்னர் வெளிவந்தது. அவர் எழதிய இத்தகைய விளக்கங்கள் பல. அவை சித்தாந்த வளர்ச்சிக்குப் பெரிதும் துணைசெய்வன. சைவத்தைச் சிதையாமற் காப்பதற்காக 'சைவத்தமிழ் அறிவியற் பணபாட்டியக்கம்' என்ற பெயரில் பிரசுரங்களையும் அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பிற அறிஞர்கள்
சபாபதி நாவலர் (1844 – 1903) எழுதிய நூல்கள் பதினான்கு என்று அறியப்படகிறது. இவருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது. ஆறுமுக நாவலர் வேண்டுகோளுக்கிணங்கி அவர் சிதம்பரத்தில் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலை என்ற அச்சகத்தை நிறுவி, 'ஞானாமிர்தம்' என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார்.

சபாரத்தின முதலியார் (1858 - 1922)
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆறு அரிய நூல்கள் எழுதியவர். பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் பரவிய கடவுள் மறுப்புக் கொள்கையை எதிர்த்து அவர் எழுதிய நூல் ஈசுர நிச்சம். பிற மதத்தவரின் சைவ நிந்தனையையும், அவதூறுகளையும் பொய்யுரைகளையும் எதிர்த்து அறிவியல் நோக்கில் எழுதப்பட்ட சிறந்த ஒரு நூல்‘Essentials of Hinduism in the Light of Saiva Siddhanta’.

மு. திருவிளங்கம் (1859 – 1922) சித்தியார், சிவப்பிரகாசம், கந்தரலங்காரம் ஆகிய நூல்களுக்கு அரிய உரைகள் எழுதியுள்ளார். தெளிவும் எளிமையும் மிக்கவை இவரின் உரைகள். சிவப்பிரகாசத்துக்கு இவர் உரைபோல் சிறப்பான உரை இதுவரை வெளிவந்ததில்லை.

வேலணை வி. கந்தப்பிள்ளை அவர்கள் தத்துவப்பிரகாசர் செய்த தத்துவப்பிரகாசம் நூலை ஆராய்ந்து, தெளிவுரையும் விளக்கவுரையும் எழுதி அச்சில் முதலில் வெளியிட்டவர். இவர் நாவலரின் மாணாக்கராக இருந்தவர்.

திக்கம் செல்லையாபிள்ளை எனப் பெயர் கொண்ட அச்சுவேலி ஈசான சிவனார் சீகாழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச் செய்த துகளறுபோதம் நூலுக்கு முழுமையான உரை எழுதியவர். துகளறுபோதம் பதினான்கு சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றில்லை எனினும், அது பதினைந்தாவதாகக் கொள்ளத் தக்க தகுதி வாய்ந்ததென்று கருதுபவருமுண்டு.
சைவசித்தாந்தத்தையும் சிவநடனத்தையும் உலகறியச் செய்த பெருமை ஈழத்துக் கலாயோகி ஆனந்தா குமாரசாமியைச் சாரும். உண்மை விளக்கம் என்ற சைவசித்தாந்த நூலின் பாடலொன்றைக் கருவாகக் கொண்டு அவரின் புகழ் பெற்ற 'சிவநடனம்' (Dance of Siva) என்ற நூலில் 'சிவநடனம்' என்ற கட்டுரை அமைந்துள்ளது.

அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள் சைவசித்தாந்தம், சைவக்கிரியைகள் குறித்த அரிய நூல்களை அளித்தவர். இவரின் 'முப்பொருள் விளக்கம்' என்ற நூல் சைவசித்தாந்தப் பொருளை விரித்துக் கூறும் சிறந்த நூல். 'சிவபூசை விளக்கம்' என்ற நூல் ஆகமம், சித்தாந்தம், திருமுறைகள் ஆகியவற்றின் பின்னணியில் சிறந்த விளக்கங்களைத் தருகின்றது. இவர் வேறு நூல்களும் ஆக்கியுள்ளார். .

'ஒரு விஞ்ஞானப் பட்டதாரி '(A Science Graduate) என்ற பெயரில் நூல்களும் கட்டுரைகளும் எழுதியவர் அ. விஸ்வநாதன். சிவஞானபோதம், சிவஞான சித்தியார், திருமந்திரம், ஆகமங்கள் பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இந்துசாதனத்தில் தொடர் கட்டுரைகளாக இவர் எழுதியவை பின்னர் நூலுருவாக வந்தன. இங்ஙனம் வந்த ஒரு சிறந்த நூல் ‘The Elements of Saiva Siddhanta’ என்பது. இது சித்தியார்ப் பொருளைப் பிரதிபலிப்பதாகவுள்ளது.

ஈழத்தில் பிறந்த சிவநந்தி அடிகள் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தையும் அதன் செயல் அங்கமான உலக சைவப் பேரவையையும் தோற்றுவித்து அரும் பணிகள் செய்தவர். ஞானசூரியன் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ், சைவம், சித்தாந்தம் ஆகிய துறைகளில் பத்துக்கு மேற்பட்ட நூல்களும் பல அரிய கட்டரைகளும் எழுதியுள்ளார்.

மேற்கண்ட அறிஞர் வரிசையில், தென்புலோலியூர் ந. கதிரைவேற்பிள்ளை, உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப்பலவர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை என்று மேலும் பலரைக் குறிப்பிடலாம். இவர்கள் எல்லோரும் ஈழத்தில் சைவமும் அதன் தத்துவமான சித்தாந்தமும் சிதையாமல் வளர ஆக்கமிகு பணிசெய்த பெருமக்களாவர்.

---------------------------------------------------------------------------------------------------------------------

(குப்பிழான் மண்ணில் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் அவதரிக்கிறார்கள், அந்த வரிசையில் திரு கலாநிதி க.கணேசலிங்கம் அவர்களும் ஒருவர். அவர்கள் தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவருகிறார்கள். உலகெங்கும் நடக்கும் பல சைவ மகாநாடுகளில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு எமது ஈழத்திரு நாட்டுக்கும், எமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் செந்திநாதையர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து ஆராய்ச்சி செய்த, சைவர்களின் புண்ணிய பூமியான, காசியில் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளி விழா 2012 ஆகஸ்ட் 6, 7, 8-ந் திகதிகளில் நடைபெற்றது. தமிழகத்து திருப்பனந்தாள் ஆதீனத்தின் அனுசரணையுடன் அவர்களின் குமரகுருபரர் மடத்து மண்டபத்தில் (குமாரசாமி மடம் என்றழைக்கப்படும் காசி மடத்தில்) நடைபெற்ற இவ்விழாவின் இறுதி நாளில் அவர்களின் சொற்பொழிவு இடம் பெற்றது. 'சித்தாந்தம் வளர்த்த ஈழத்து அறிஞர்கள்' என்ற தலைப்பில் அமைந்த அவர்களின் சொற்பொழிவு அந்த அமைப்பின் வெள்ளி விழா மலரில் உள்ளது. இதில் குப்பிளான் அறிஞர் செந்திநாதையர் பணிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.)